ஆமருவி தேவநாதனின் “ பழைய கணக்கு “

ஆமருவி தேவநாதன்
நண்பர் ஆமருவி தேவநாதனின் புத்தகம் “ பழைய கணக்கு “. இந்தச் சிறு கதைத் தொகுப்பில் , இது இரண்டாவது கதையின் பெயர்.
“இன்னிக்கு சாப்பாடு இல்லை. நீ வேற ஆத்துக்குப் போ “ என்று கதையின் முதல் பத்தியில் வருகிறது.
தொடர்ந்து படிக்க முடியவில்லை. காரணம் , பசி..
பசி என்றால் தற்போதைய பசி இல்லை. அவல் உப்புமா, தக்காளி சட்டினி, ஒரு மலைப் பழத்துக்குப் பிறகுதான் ஆமருவியைக் கையிலெடுத்தேன். இந்தப் பசி பழைய பசி. பசி பற்றிய நினைவுகள் .
ஒரிஸ்ஸாவில் தொடங்கி கேரளத்தில் முடிவுற்ற பசி. பசி என்பதை எழுத்தில் மட்டுமே படித்துத் தெரிந்து கொண்டவர்களுக்கு இது வசப்படாது. அது, உடலின் ஒரு பகுதியாக , ஒரு கட்டத்தில் உடலையே உணவாக்கிக் கொள்ளும் உந்துதலாக இருப்பதை எல்லோரும் அனுபவித்திருக்க முடியாது.
சென்னையில் இருந்து புறப்பட்டு ஹெளரா மெயிலில் ஒரிஸ்ஸாவின் தலைநகர் புவனேச்வரத்துக்கு வந்தேன(1980)். அங்கிருந்து நூல் பிடித்தாற்போல் கிழக்கு நோக்கி ஒரு ரோடு.. நூறு கிலோமீட்டருக்குப் பிறகு கடற்கரைத் துறைமுகம் ; பெயர் பாரதீப் ..
இந்த பாரதீப்பில் ஒரு வருட காலம் இருந்தேன். மீன் பிடித் தொழில்தான் ஜீவனம். பாரதீப் ஒரு தளம் தான். அங்கிருந்து புறப்பட்டு வடக்கே போய், மகாநதி கடலில் கலக்கும் இட்த்தில் நூற்றுக் கணக்கான தீவுகள் இருக்கும். அந்தத் தீவுகளில்் தங்கித் தான் மீன் பிடிப்புத் தொழில் .
ஆளில்லாத ஒரு தீவில் என்னை விட்டு விட்டு மீனவர்கள் படகில் ஏறி கடலில் போய் விட்டார்கள். என்னோடு ஏகப்பட்ட திரவியங்கள். அரிசி, பருப்பு, தண்ணீர் கேன், காய்கறிகள், தேங்காய், பால் பவுடர், எண்ணெய், காப்பித் தூள், மண்ணெண்ணெய் , ஸ்டவ் என்று..
நான் தனியாக இருந்தேன் என்று சொல்லியிருந்தால் திருத்திக் கொள்ளவும்.. என்னோடு பராசக்தி.....
சிலர் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார்கள். சிலர் அபிஷேகத்துக்குப் பணம் கட்டி விட்டு அலங்காரத்தைப் பரவசமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் விரதம் இருப்பார்கள். சிலர் தீக்குழியில் நடப்பார்கள.் நம்முடைய வழிபாட்டு முறை வித்தியாசமானது.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவள்தான் காரணம் என்று ஓயாமல் குறை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு குறையை அவள் நிறைவு செய்து முடிப்பதற்கு முன்பே , அடுத்ததை ஆரம்பித்து விடுவேன். அவள் அசர மாட்டாள். அலுப்பு இல்லாத அபிராமி.
குறைப் பட்டியலை அவளிடம் கொடுத்து விட்டு அந்தத் தீவில் காலாற நடந்தேன். நான் இருந்தது மேடான பகுதி. மறுபக்கம் தாழ்வான பகுதிக்குள் வந்தால் அங்கே அதிசயமாய் ஒரு குடிசை.
குடிசையில் ஒரு கேரளத்துக்காரர். பூர்வாச்ரமத்தில் அவர் ஒரு சமையற்காரர். தீவில் சுலபமாக போலீஸ் வர முடியாதென்பதால் மீனவர்களுக்காக சாராய உற்பத்தி செய்து கொண்டிருந்தார். அவருக்கே சாப்பாட்டுக்குத் தட்டுப்பாடு என்கிற நிலை. என்னுடைய பண்டகசாலையை அவரிடம் ஒப்படைத்தேன். சாராயக் கடையை இழுத்து மூடி விட்டார். உடனடித் தயாரிப்பாக பூண்டு ரசமும் உருளைக் கிழங்கு ரோஸ்டும் செய்து விட்டார். சாப்பிட்டேன். கைகழுவி விட்டுத் திரும்பிப் பார்த்தால் கல்லாப் பெட்டிக்கு மேலே கொடுங்களூர் பகவதி என்னை முறைத்துக் கொண்டிருக்கிறாள். வயிறு நிறைந்து விட்டதால் நான் வாக்குவாதம் செய்யவில்லை. ..
ஆமருவியின் சிறுகதை ?
அக்கிரகாரத்துக் கதை.வைதிக பிராம்மணரின் பையன் ஹைஸ்கூல் படிப்பிற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இரவில் தேசிகர் மடத்தில் வவ்வால்களோடு சகவாசம். இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல, அவனுக்கு ஒருநாள் இரவு உணவு மறுக்கப் படுகிறது. அந்தக் கணக்கு பின்னாளில் பெங்களூருவில் நேர் செய்யப் படுகிறது என்று எழுதுகிறார் ஆமருவி.
எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
சிறுகதையை இதைவிடச் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத முடியாது என்று நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment