ராதிகா ரைத்தா

என்னடா இது என்று நீங்கள் யோசிக்கக்கூடும் என்பதால்  முதலிலேயே சொல்லி விடுகிறேன். ‘ரைத்தா என்பது ஒரு உணவுப் பொருள் : தயிர்ப் பச்சடியின்  வட நாட்டு  வடிவம். ராதிகா? என்னுடைய அன்புக்குரிய உறவினர்  ஸ்ரீரங்கம் விச்வநாதனின் அன்புக்குரிய மனைவி. என்னுடைய மருமகள் என்று சொன்னால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விடும். அதனால் மகள் என்றே சொல்கிறேன்.

கடந்த வாரத்தின் இறுதி நாட்களை அவர்கள் வீட்டில் செலவிட்டேன். தமிழ்நாடு வாசகர் வட்டத்தின் திருச்சி மாவட்ட கிளை துவக்க விழா, டிசம்பர் 16, 2012 அன்று நடை பெற்றது. அதைப் பற்றிய விவரங்களை இங்கே எழுதி உங்களைச் சோதிப்பதாக இல்லை. இது ரைத்தா பற்றித்தான். கொஞ்சம் ராதிகாவைப் பற்றியும். 

“ நீ விஜயகாந்த் மாதிரி இருக்கேம்மா என்று சொல்வேன், பதிலுக்கு அந்தப் பெண் கண்களை அகல விரித்து, விழிகள் வெளியே விழுந்து விடுமோ என்ற அளவுக்கு ஆச்சரியப்படும். பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்த்த , முகத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு மாறாத புன்னகை இருக்கும். 

“ பருமனான உடலை வைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த், சண்டைக் காட்சிகளில் செய்வதை ஒல்லி நடிகர்கள்கூடச் செய்ய முடியாது. மேலே எகிறி, ஒரு காலை சுவற்றில் பதித்துக் கொண்டு, இன்னொரு காலால் எதிரியை உதைப்பார்.  சில விசேஷமான காட்சிகளில் எதிரிகளை உதைப்பார். அதற்கக , நீ யாரையும் உதைக்க வேண்டாம் ; கொஞ்சம் தாட்டியான உடலை வைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக நடமாடுகிறாயே , அதைச் சொல்கிறேன் “என்று நான் விவரித்தவுடன் அவளுடைய கண்கள் யதாஸ்தானத்துக்கு வந்து விடும். புன்னகை? அது அப்படியேதான் இருக்கும். 

ராதிகாவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாயே , ரைத்தா எப்போது வரும்  என்று கேட்பவர்கள் சமீப கால தமிழ் உரைநடையின் நான் லீனியர் படைப்புகளையும் , மேஜிகல் ரியலிஸத்தையும் அறிந்திருக்கிற மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு உத்தரவாதத்தை மட்டும் கொடுக்கிறேன். நிச்சயமாக ரைத்தா உண்டு.
ஏகப்பட்ட புத்தகங்களோடும் , ஏராளமான அழுக்குத் துணிகளோடும் ராதிகா கொடுத்த மஞ்சள் பையோடும் திருச்சி ஜங்க்ஷனில் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் ஏறினேன்.

லெமன் சேவையயும் , தயிர் சேவையையும் , வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் புறப்பட்டேன். சோறு செரிப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறார்கள். வைகை எக்ஸ்பிரஸ் இருக்கிற லக்ஷணத்தில் நம்முடைய கையை கொஞ்சம் அசைத்தால் அடுத்தவர் கக்கத்தில் சிக்கிக் கொள்கிறது. எனவே, உடற்பயிற்சி ரூல்ட் அவுட். அடுத்தது, நமக்குப் பிடித்தது.  கை கால் அசையாமல் , கலோரிகளை செலவழிப்பது – புத்தகம் படிப்பது. மூன்று மணி நேர முயற்சியில் வெற்றியூர் அரு . சுந்தரம் எழுதிய “நகரத்தார் பெருமை யை உள் வாங்கிக் கொண்டேன்.

புத்தகத்தை முடிக்கவும் , பசி எடுக்கவும் சரியாக இருந்தது. மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு , முன் சீட்டில் இணைக்கப் பட்டிருந்த சாப்பாட்டு மேசையை விரித்தேன். அது மேலும் கீழுமாகக் குதித்தது. காரணம், முன் சீட்டில் இருந்த சேட் குடும்பம். சேட்டின் பெண் குழந்தை சீட்டில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. எந்த நேரமும் உணவு எகிறி விடலாம் என்ற நிலையில் சேட்டிடம் பேசினேன். நண்பர்கள் நகைக்க வேண்டாம்: இங்கிலீஷில்தான் பேசினேன்.
ராதிகாவை தே மு தி க தலைவரோடு ஒப்பிட்டது சரிதான். இந்த டிஃபன் கேரியரைத் திறப்பதற்கு கேப்டனைத்தான் கூப்பிட வேண்டும். அதுவும் அவர் ஸ்டெடியாக இருக்கும்போது. 

பக்கத்து சீட்டு  இளைஞர் நான் கேட்காமலேயே உதவினார். இந்த முறை டிஃபன் கேரியரும் ஒத்துழைத்தது. இதற்குள் சேட் இடம் மாறி உட்கார்ந்தார். என்னுடைய உணவுக்கு வந்த கண்டம் தப்பியது.
ஒரு கிண்ணத்தில் பட்டாணி சாதம், குட்டி டப்பாவில் தக்காளி சாஸ். நல்லெண்ணத்தோடு தயாரிக்கப்பட்டதென்றாலும் , ருசி நன்றாகத்தான் இருந்ததென்றாலும், ஒவ்வொரு கவளமும் தொண்டை என்ற இடத்திற்கு வந்து சற்று இளைப்பாறி விட்டு அப்புறம்தான் கீழே இறங்கியது.
அடுத்தது, தயிர் சாதம். அதற்குத் தனியாக ஒரு டப்பாவில் ஊறுகாய். தயிர் சாதமும், கெட்டியாகத்தான் இருந்தது என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.

சாப்பிட்டு முடித்து கடையைக் கட்டும்போதுதான் கவனித்தேன். மஞ்சள் பையில் ஒரு சீசா மிச்சமிருந்தது. அந்ட சீசாவில் இருந்தது வெங்காய ரைத்தா பட்டாணி சாதத்திற்கு ரைத்தாவைத் தொட்டுக் கொள்ள வேண்டுமென்று , அந்தப் பெண் சொன்ன அறிவுரை இப்போது ஞாபகத்திற்கு வந்தது. ஓர் ஆய்வு மனப்பான்மையோடு மதிய உணவை பகுதி பகுதியாகச் சாப்பிட்டது என்னுடைய தவறுதான் .
ரைத்தாவுக்கென்று ஒரு குட்டி ஸ்பூனும் இருந்தது. ஸ்பூனில் ரைத்தாவை எடுத்து நான் சுவைத்துக் கொண்டிருந்த போது , பக்கத்து சீட்டு வாலிபர் பார்த்த பார்வையில் ஆச்சரியமில்லை, அருவருப்பு இல்லை. அனுதாபம் தான் இருந்தது ...

சென்னை வந்தவுடன், முதல் வேலையாக மனைவியிடம், “இரவு சப்பாத்திக்கு  ரைத்தா செய்து விடுஎன்று சொன்னேன். “வெள்ளரிக்காய்  ரைத்தாவா, வெண்டைக்காய் ரைத்தாவா; கத்திரிக்காய் ரைத்தாவா, பூந்தி ரைத்தாவா என்று அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.“ ராதிகா ரைத்தா பண்ணிடும்மா “ என்றேன்.அவளுக்குப் புரியவில்லை, உங்களுக்குப் புரிந்திருக்கும் ..

0 comments:

Post a Comment