அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்

பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.