சித்ரகுப்தனின் நோட்டுப்புத்தகம்


இன்னொரு அறிமுகம்: இந்த நண்பருடைய மகள் திருமணம்.
மாலை வரவேற்புக்குப் போயிருந்தேன். தடுக்கி விழுந்தால்
தமிழறிஞ்சர்கள், பேச்சாளர்கள்,பிரமுகர்கள்.என்னால் அங்கே
ஓட்ட முடியவில்லை.காரணம், சுனாமி.தமிழ்நாட்டை சுனாமி
தாக்கிய இரண்டாம் நாள் அது.
சென்னை பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சமைத்து
உணவை எடுத்துக் கொண்டுபோய் மகாபலிபுரம் அருகில் உள்ள
கிராமங்களில் கொடுத்து வந்தோம்.அந்த வேலையில் ஒரு
தடங்கல் ஏற்பட்டுவிட்டது.` கோவிலில் உள்ள அரிசியை நிவாரணப்
பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது ` என்று ஒருவர் எதிர்ப்பு
தெரிவித்து விட்டார். நண்பர்கள் அவரைத் தட்டி விடலாம் என்றார்கள்.
எனக்கு உடன்பாடில்லை.அந்தக் கவலையோடுதான் இந்த
வரவேற்புக்கு வந்தேன்.
பெண்ணின் திருமண மிதப்பில் இருந்தாலும் , மதியூகி என்ற முறையில்
என்னுடைய தவிப்பை நண்பர் புரிந்து கொண்டார்.
விசாரித்தார்.சொல்லிவிட்டேன்.` நீ சாப்பிட வேண்டாம். புறப்பட்டு`என்று
சொல்லி என் சட்டைப் பையில் ஒரு கவரை வைத்தார்,..

என்னுடைய பிரச்சினை தீர்ந்துவிட்டது, கோவில் கரும்பலகையில்
சுனாமி நிதி என்று எழுதினேன். முதல் பெயர் சுகி சிவம். மறுநாளுக்குள்
பணம் சேர்ந்துவிட்டது.
சிவத்தின் இந்த குணம் இன்னும் பரவலாக அறியப்படவில்லை.
அறநெறி என்று நினைப்பதால் விளம்பரத்தை அவர் விரும்புவதில்லை.
அறிமுகப் பேச்சாலர்களுக்கான தொகையை அவரே கொடுத்து சில
மேடைகளில் பேச வைத்திருக்கிறார்...

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்துக் கோவிலில் என்னுடைய உறவினர்
ஒருவர் உழவாரப் பணி செய்து கொண்டிருந்தார்.அந்தக் கிராமத்தின்
முக்கிய பிரச்சினை தான் இன்றைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை.
அது டாஸ்மாக்.நாள் முழுதும் வேலை செய்து கிடைக்கும் கூலி, பெண்டு
பிள்ளைகளுக்குப் போய்ச்சேராது.இவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டும்
என்று நினைத்து அவர் என்னிடம் வந்தார்.` குடியின் தீமை பற்றி யாராவது
பேசவேண்டும்.ஆனால் செலவு செய்ய முடியாது ` என்றார்.

நண்பர்களை நம்பித்தான் நான் பொதுப்பணியில் இறங்கியிருக்கிறேன் என்ற
உள்விவரத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.குடியை ஒழிக்கும் குழுவில்
பத்து பேர் சேர்ந்துவிட்டார்கள். அந்தக் கிராமத்தில் சிவத்தின் இதயபூர்வமான
உரை நிகழ்த்தப்பட்டது. தொலைகாட்சி செய்தி அதிகாரி லோகேஸ்வரி வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.இசைக் கவி ரமணனின் அப்பா அனந்த ராம செஷன்
ஒரு வேத வித்து. அவர் மனைவியோடு வந்து உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.
நாம, மோடிவேஷனோடு சரி.

திரும்பி வரும் வழியில் கட்டு சாதக் கூடையைப் பிரித்தோம். குடிப்பழக்கம்
குறைந்ததா என்று தெரியவில்லை. ஆனால் சித்திர குப்தன் நோட்டுப் புத்தகத்தில்
சுகி சிவம் என்ற பக்கத்தில் வரவு வைத்துக் கொண்டதாகக் கேள்வி.

அமானுஷ்யம்


ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்
பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

பவல் சன்யாசி




வைகோ

புதிய தலைமுறை நேர்காணலைப் பார்த்தேன்.
வைகோ பண்போடு பேசுகிறார்.தோல்விகளால்
துவண்டுவிடவில்லை என்பதைப் பாராட்டலாம்.
ஆனால் அவர் மாறி வரும் சூழலைப் புரிந்துகொள்ளவில்லை
என்றே நான் நினைக்கிறேன். உலகத் தமிழர்களின்
ஆதரவை வைத்துக்கொண்டு தமிழகத்தில் வெற்றி
பெற முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அரசியலைப் பொறுத்தவரை
ஒரு தளத்தில் பலமாக இருப்பது இன்னொரு தளத்தில்
பலவீனமாக மாறிவிடும். கட்சி நடத்த பணம் தேவை.ஆனால்
பணம் படைத்தவர்களிடம் கட்சி கை மாறி விட்டால்
அதுவே மக்களை கட்சியில் இருந்து அன்னியப் படுத்திவிடும். 1967 இல்
காங்கிரசுக்கும் 2011 இல் தி மு க வுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு
இதுவும் ஒரு காரணம்.

வைகோ வைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான
நிலைப்பாட்டை எடுப்பதால் அவருடைய கட்சிக் காரர்கள்
அவர் மீது அபிமானத்தோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையான
தமிழர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கத் தயங்குவதற்கும்
இதுதான் காரணம். இந்த சிக்கலை விடுவித்தால் அவருக்கு
வெற்றி கிடைக்கலாம். அரசியலில் அடிப்பவனை விட
அடி வாங்குபவனுக்கே அதிக வோட்டு விழும்.

சுகி சிவமும் சமஸ்தானமும்

அறிமுகம்: வழக்கறிஞ்சர் கே. ரவி. மொரார்ஜி பிரதமரரக
இருந்தபோது சந்திப்பு ஏற்பட்டது. மன்மோகன் காலத்திலும்
நட்பு நீடிக்கிறது. தனிப்பட்ட முறையிலும் தத்துவத் தேடலிலும்
நட்பு வலுப்பட்டது. என்னையும் ரவியையும்
ஒன்றாகப் பார்க்கும்போது ரவி மூத்தவர் என்று மக்கள்
முடிவெடுக்கிறார்கள். இரண்டு காரணங்கள்.ஒன்று, ரவியின்
தலையில் முடி இல்லை.இரண்டாவது ரவி சொல்வதை நான்
உடனடியாகச் செயல்படுத்துவது...

ரவியும் சுகி சிவமும் அரை டவுசர் காலம் முதல் நண்பர்கள்.
ரவி வீடு சென்னை மந்தைவெளியில்.சிவம் வீடு மைலாப்பூரில்.
ஒரு புலர் காலைப் பொழுதில் ரவி வீட்டில் ரவியோடு
பேசிக்கொண்டிருந்தேன். சிவம் அங்கு வந்தார். காபியோடு
இலக்கிய சர்ச்சை தொடங்கியது.கவிதைக்கு எது முக்கியம்?
அழகியலா? சமூகப் பயன்பாடா? என்கிற ரீதியில் மத்தாப்புச்
சிதறல்கள். வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே `வீட்டில்
குழாய் ரிபேர் ` என்று சொல்லிவிட்டு சிவம் தன் தரப்பைத்
தொடர்ந்தார். காலை விஜயத்தின் நோக்கம் எனக்குப்
புரிந்து விட்டது. ரவிக்குப் புரியவில்லை. குழாய் ரிப்பேருக்கு
ஆள் அனுப்பிவிட்டு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
சிவத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ரவி வீடு
ஒரு சமஸ்தானம். சு. ரவி, பேரா வ வே சு ,இசைக்கவி ரமணன்
போன்ற அஷ்டதிக் கஜங்களை அங்கே பார்க்கலாம்.
ரவியால் தீர்க்க முடியாத வழக்காறுகள் மேல்முறையீட்டுக்குப்
போகும். ரவியின் மனைவி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்
பட்டம் பெற்றவர். ஓவியர் . வைணிகி. தூர்தர்ஷன் ஏகபோக
தொலைக்காட்சியாக இருந்தபோது செய்தி வாசித்தார்.
ஷோபனா ரவியை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கையில் காசு இல்லையே என்ற பாதிப்பு இல்லாமல்
தொலை நோக்குத் திட்டங்களை நான் உருவாகுகிறேன்
என்றால் அதற்கு ரவி போன்ற நண்பர்கள்தான் காரணம்.


சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில்
பாரதிக்கு பெரிய அளவில் விழா எடுக்கவேண்டும்
என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது. ரவியின் செலவில்
வானவில் பண்பாடு மையம் உருவானது. இதுதான்
இன்று நம்பர் ஒன் பாரதி விழா.

ஆரியத் தமிழன்

அறிமுகம்: ஆரியத் தமிழன். விவரமான ஆசாமி.
கும்பகோணத்தில் பேச வந்த என்னை கூட்டம்
முடிந்த பிறகு கடத்திக் கொண்ட போனார்.
அன்பான உபசரிப்பு.நிறைவான குடும்பம்.
ஜாக்ரதை ,ஸ்வப்னம்,சுஷுப்தி மூன்று
நிலைகளிலும ஹிந்து சமூகத்தைப்
பற்றியே சிந்திக்கிறார் என்பதைக் கண்டேன்.

காலை எழுந்தவ்டன் மாடிக்கு அழைத்துப் போனார்.
நான் எதிர்பார்க்கவில்லை.இந்த இடத்தில் இப்படி
ஒரு அறிவுப் புதையல்.அழகாக அடுக்கி ,நூல் நிலையம்
போல நோட்டுப் புத்தகத்தில் வகை வகையாக
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என்ட்ரி.
ம பொ சி க்கு தனி அலமாரி. ம பொ சி புத்தகம்
ஒன்றைத் தேடி அவருடைய மகள் வந்தாராம். வைணவம்
பற்றிக் கேட்டால் வகுப்பு எடுக்க ஆரம்பித்து விடுகிறார்.
அரசியலில் அ முதல் இல் வரை இருக்கிறது. ஆ த இருக்கும்
இடத்தில் புத்தகம் என்பது அனாவசியம்.எல்லாவற்றையும்
அவரே சொல்லிவிடுகிறார்.

அவர் கொடுத்த பத்தகங்களை ஓடும் ரயிலில் படித்தேன்.
அதற்கு நன்றி சொல்வதா அவருடைய இல்லத்தரசி
கட்டிக் கொடுத்த கொத்தமல்லி சாதத்திற்கு நன்றி சொல்வதா
என்று முடிவு செய்வதற்குள் தாம்பரம் வந்தவிட்டது.
ஆ த வை சந்திக்க விரும்புகிறீர்களா? ஆக 19 முகாமுக்கு
வாருங்கள்.

மைபாவின் கட்சியில் ....

இதோ இன்னொரு அறிமுகம். மை பா என்று சொன்னால் மிடியாகாரர்களுக்குத்
தெரியும்.சத்யமூர்த்தி பவனாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும்
மை பா வுக்குத் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். மணிக்கணக்கில்
பேசக்கூடிய வை கோ , மை பா பேசுவதை ரசித்துக் கேட்பார்.

2000 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்று பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடந்தது. அப்போது செல்வி ஜெயலலிதா `நாராயணன்` என்று அழைத்தார்.
மொத்த மீடியாவின் கவனமும் மை பா நாராயணன் பக்கம் திரும்பியது.

செல்வி ஜெயலலிதா பருகூரில் போட்டியிட்ட 1996 சட்டமன்றத் தேர்தலிலும் மை பா
முத்திரை உண்டு. மை பா அப்போது தமிழன் எக்ஸ்ப்ரஸில் ரிப்போர்டராக
இருந்தார்.அலுவலகத்து உள் அரசியலில் இவரை ஓரம் கட்டி வைத்திருந்தார்கள்.
சில விதிகளைத் தளர்த்தி பருகூர் போவதற்கு மை பா வுக்கு உத்தரவு
வாங்கிக் கொடுத்தேன். புலனாய்வு இதழ்கள் எல்லாம் `அ தி மு க தோற்று விடும்,
ஆனால் ஜெயலலிதா ஜெயித்து விடுவார் எழுதின. மை பா மட்டும் `ஜெயலலிதா
ஜெயிக்க மாட்டார்` என்று எழுதினார்.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன.நேரடி ஒளிபரப்புக்காக
ராஜ் டி வி யோடு இணைந்து செயல்பட்டு மூன்று நாள் தூக்கம்
போச்சு. எஸ் டி டி பில் எகிறிப் போச்சு. சுதாங்கனும், ரபி பெர்நார்டும்
பிலிப்பின்ஸ் நாட்டு மணிலாவில் .சென்னையில் கண்ட்ரோல்
அறையில் நான். `முதலமைச்சர் இறங்குமுகம் ` என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே பருகூர் தொகுதி
தி மு க வேட்பாளர் சுகவனத்தொடு மை பா வந்து விட்டார்.
போட்டி போட்ட சன் டிவி க்கு முழி பிதுங்கி விட்டது...

மை பா இப்போது n d tv hindu வில் இருக்கிறார். இதெல்லாம்
உங்களுக்காக சொன்னேன். நம்முடைய ரசனையே வேறு.
ஒரு முறை அவருடைய பல்லாவரத்து வீட்டுக்குப் போனேன்.
`சார் முக்கியமான வேலை இருக்கிறது ` என்று சொல்லி
உட்காரவைத்து விட்டுப் போனார். ஜன்னல் வழியாகத்
தெரிந்த காட்சி: புழக்கடையில் மனைவிக்கு ஒத்தாசையாக
தளிகைக்கு கிணற்றிலிருந்து தீர்த்தம் சேர்த்துக் கொண்டிருந்தார்.
அன்றைக்கே நான் அவர் கட்சியில் சேர்ந்து விட்டேன்.

இன்னொரு விஷயம். எப்போது போன் செய்தாலும், எந்த
அவசரத்திலும் `ஊரிலேன் காணி இல்லேன்....` என்று பாசுரம்
சொல்லாமல் விட மாட்டார். சத்சங்கத்வே நித் சங்கத்வம்.