மாம்பழ மாகாத்மியம்


ஒரு வார பயணம். ஸ்ரீரங்கத்தில் ஜாகை.இரண்டு முறை புதுக்கோட்டை போய் வந்தேன்.
முதல் முறை புவனேஸ்வரி கோவில்,கீழப்பனையூர் காமாக்ஷி அம்மன் கோயில் 
போனேன். இது தவிர சில சமாதிகள்.இதில் எச்சில் பொறுக்கி சாமிகளைப் 
பற்றியும் வெள்ளை வேட்டி சாமிகளைப் பற்றியும் பிறகு விவரமாக எழுத 
வேண்டும்.இரண்டாவது புதுக்கோட்டை விஜயத்தில் ஞானாலயா நூல் 
நிலையம்.இங்கே படிப்பது ஒரு சாக்கு.நண்பர் க்ரிஷ்ணமுர்த்தியிடம் பேசுவதே 
ஒரு இனிய அனுபவம்.இவரைப் பற்றியும் எழுதவேண்டும். இவருடைய 
மனைவி டோரதி ஒரு கிறிஸ்துவர். தவறாமல் மாரியம்மன் கோவிலுக்குப் 
போகிறார்.
விருந்தாளி வந்த சந்தோஷத்தில் உறவினர் ரமணா தாத்தாச்சாரியார் 
தோட்டத்திற்குப் படையெடுத்து விட்டார். மூணு வேளையும் மாம்பழம்தான்.
பெங்களூரில் இருந்து வந்தார் ரமணாவுடைய நண்பர்.அவர் தருமபுரி மாம்பழம் ஒரு 
கூட்டை எடுத்து வந்தார். எப்படியோ தப்பி சென்னை வந்து சேர்ந்தால் வீட்டில் 
கால் வைக்க இடமில்லாமல் விஜயவாடா ரசாலு.போன ஜென்மத்தில் மாம்பழம் 
கேட்டு பராசக்தியை நச்சரித்திருக்கிறேன். இப்போது அவளுடைய லேட் கட்.

நடிகர் ராஜேஷ்

இன்றைய தினமணி நடுப்பக்கம் பார்க்க: கலா ரசிகன் எழுதும்
இந்த வாரம் பகுதியில் திரைப்பட நடிகர் ராஜேஷ் எழுதிய
`ஜோதிடம் -புரியாத புதிர்` புத்தகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நானும் துக்ளக்கில் எழுதும் தொடரில் ராஜேஷின் கட்டுரைகளைப்
பற்றி எழுதியுள்ளேன். சில நேரங்களில் ராஜேஷோடு தொலைபேசியில்
உரையாடும்போது போனில் குறிப்பெடுக்கும் வசதி இல்லையே என்று
நினைப்பேன்.ஆங்கில இலக்கியம்,மார்க்சியப் பொருளாதாரம் ,உள்ளூர்
அதிசயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேதிகள் வந்து விழும். சில விஷயங்களில்
சினிமாக்காரர் என்பதாலேயே சமூகம் சிலாகிப்பது உண்டு. உதாரணத்துக்கு
கமல் ஹாசனின் கவிதைகள். இதற்கு எதிர்மறையான விளைவுகளும் உண்டு.
சினிமாக்காரர் என்பதால் அறிவுலகம் மரியாதை கொடுக்க மறுக்கிறது.
ராஜேஷின் அறிவுத் திறன் அறியப்படவில்லை.சித்தார்த் பாசு நடத்திய
பி பி சி க்விஸ் நிகட்சியில் நடிகை கஸ்தூரி இறுதிச் சுற்று வரை வந்தார்
என்பது தெரியுமா?.கஸ்தூரி பற்றிய வேறு சில விஷயங்களுக்கு
வாராவாரம் ஒரு புலனாய்வு இதழின் பக்கங்கள் வீணடிக்கப்பட்டன.

இது விஜகாந்த் இல்லை

இன்று காமராஜர் பிறந்த நாள்:

ம வெ சிவகுமார் பிரபலமான் சிறுகதை எழுத்தாளர்.
இவர் காமராஜரைப் பற்றி என்னிடம் சொன்னது இது.
1968 ஆம் ஆண்டு. தி மு க ஆட்சி.சென்னை நகரத்தில்
மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும்
மோதல் ஏற்பட்டது. அமைச்சரான கருணாநிதி
போக்குவரத்து ஊழியர்களை ஆதரித்தார். இதனால்
கோபமடைந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
`கருணாநிதி ஒழிக, ஆட்சியை மாற்றுவோம்` என்று
கோஷம் போட்டுக்கொண்டு காமராஜ் வீட்டுக்கு
ஊர்வலமாகப் போனார்கள்.காமராஜ் வெளியே
வரவில்லை . `வந்து இரண்டு வார்த்தை பேசுங்க`
என்று சிலர் உள்ளே போய் கேட்டுகொண்டார்கள்.
வெளியே வந்த காமராஜ் `படிக்கரதுக்குதான்
உங்க பெற்றோர்கள் பணம் கட்டியிருக்காங்க.
போய் படிக்கிற வழியைப் பாருங்க` என்று
சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
மாணவர்கள் கலைந்து சென்றனர்.
அவர் அந்தக் கூட்டத்தை உசுப்பேத்தி இருந்தால்
நாலு பஸ் உடைக்கப்பட்டிருக்கும் .தடியடியில்
மாணவர் ரத்தம் சிந்தியிருக்கும். விடுதலைப் போரில்
தன்னுடைய ரத்தத்தை சிந்திய தலைவனுக்கு
மாநில அரசியலுககாக மற்றவர் ரத்தத்தை
சிந்தத் தெரியவில்லை.

 
என்னுடைய நண்பன் தெய்வசிகாமணியின் அனுபவம் இது:
1967. தி மு க ஆட்சி. சென்னையில் நடந்த காங்கிரஸ் ஊர்வலத்தில்
கலவரம், தடியடி. ஊர்வலத்தில் வந்தவர்கள் அண்ணா சிலை மீது
செருப்பு வீசியதாக தி மு க தரப்பில் சொல்லப்பட்டது.
போலீஸ் வன்முறையை கண்டித்து கவிஞ்சர் கண்ணதாசன்
தலைமையில் மௌன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில்
தெய்வசிகாமணி கலந்து கொண்டார். காமராஜர் அண்ணா சிலைக்கு
கீழே நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் `காமராஜருக்கு
ஜே ` என்று தெய்வசிகாமணி குரல் கொடுத்தார். உடனே விழுந்தது
ஒரு அறை. `மௌன ஊர்வலத்தில இவன யார் சேர்த்தது?
என்று சொல்லி அடித்தவர் காமராஜர். ஒரு வார காலத்துக்கு
`காமராஜர் என் கன்னத்தில அடிச்சாரு ` என்று தம்பட்டம்
அடித்துக்கொண்டார் தெய்வசிகாமணி.
இவரைப்போல் இன்னொரு தலைவர் வருவாரா?

கடையில் உள்ள கருணாநிதி


மொத்த சோவியத் ரஷ்யாவும் ஸ்டாலின் பிடியில்
சிக்கியிருந்த நேரம் அது. நாட்டு நிலைமையை அறிவதற்காக
ஒரு நாள் மாலையில் ஸ்டாலின் மாறுவேஷத்தில்
புறப்பட்டார். ஒரு புத்தகக் கடைக்குப் போனார்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் ஸ்டாலின் எழுதிய
புத்தகங்கள், ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்,
ஸ்டாலின் படம் போட்ட வாழ்த்து அட்டைகள்.
ஸ்டாலின் படத்தோடு பூங்கொத்துகள் நிரம்பியிருந்தன,
கஷ்டப்பட்டு தன்னுடைய சந்தோஷத்தை அவர்
அடக்கிக்கொண்டார்.

குரலைத் தாழ்த்திக்கொண்டு கடைகாரரிடம் கேட்டார்.
`லெனின் எழுதிய புத்தகம் இல்லையே, ஏன்? ` என்றார்.
`அதெல்லாம் விற்று விட்டது` என்றார் கடைக்காரர்...

நேற்று, சென்னை ஹிக்கின்போதொம்ஸ் கடைக்குப்
போனேன். சீனி விஸ்வநாதனின் `கால வரிசைப்படுத்தப்பட்ட
பாரதியார் கவிதைகள்` கேட்டேன். `விற்றுவிட்டது` என்று
சொல்லப்பட்டது. ஸ்டாலின் குணசேகரனின் `விடுதலை
வேள்வியில் தமிழகம்` கேட்டேன். `விற்று விட்டது` என்ற
பதில் வந்தது. `விழியும் இமையும்` என்ற புத்தகம் கட்டுக் கட்டாக
இருந்தது. ஈ வெ ரா வுக்கும் கருணாநிதிக்கும் உள்ள உறவு பற்றிய
புத்தகம் இது. இதை வாங்கி வந்தேன். நிச்சயமாக தமிழ்நாடு
உருப்பட்டுவிடும்.

லண்டன் ராணி


காலையில் கிருஷ்ணன் என்ற போஜனப் ப்ரியனை
அறிமுகப் படுத்தினேன். அதே வகையில் இன்னொரு
என்ட்ரி ராணி ஸ்ரீனிவாசன். திடீரென்று போனில்
கூப்பிட்டு` வீட்டு சாப்பாடு, வீட்டுச் சாப்பாடு- இதில்
எது சரி ` என்று கேட்பார். நான் இலக்கணப் புலவன்
இல்லை என்று பலமுறை சொன்னாலும் இந்தப்
பெண்ணுக்குப் புரியவில்லை. நல்ல உழைப்பாளியான
இவர் கடந்த சில வருடங்களாக லண்டனில் இருக்கிறார்.
ஹோடேலில் வேலை.ஏதோ மேல்படிப்பும் உண்டு.
அதெல்லாம் நமக்குப் புரியாத விஷயம்.

லண்டனில் யாராவது தமிழ் இலக்கியக் கூட்டம் போட்டால்
இவர் அங்கே ஆஜராகிவிடுவார். இதில் என்ன சேதி இருக்கிறது
என்கிறீர்களா? ராணி வெறும் கையோடு போக மாட்டார்.
கையில்` திராவிட மாயை `புத்தகம் இருக்கும்.இந்தியாவில்
தப்பித்தவர்கள் இங்கிலாந்தில் மாட்டிக்கொள்கிறார்கள். ராணிக்கு
நான் ஏன் முக்யத்வம் கொடுக்கிறேன் என்று புரிகிறதா?

லண்டன் போன புதிதில் ராணியை ஒரு வெள்ளைக்காரன்
பின்தொடர்ந்திருக்கிறான்.ராணிக்கு பாதி குளிரில் ,பாதி
பயத்தில் நடுக்கம். வழியில் தென்பட்ட போலிஸ்காரரிடம்
கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார். போலீஸ்காரர் வீடு வரை
கூடவே நடந்து வந்தாராம். வெள்ளைக்காரனை எதுவும்
செய்யவில்லையாம். வீடு வந்தபிறகு போலீஸ்காரர்
`rani, you are new to england.soon you will love it` என்று சொன்னாராம்.

ராணிக்கு நாட்டுப் பற்று குறைந்து விடுமோ என்பதுதான்
என்னுடைய கவலை.

பசிவேளையில் பாகி


தொழில்நுட்பத்திற்கும் எனக்கும் வெகு தூரம்.
வீட்டில் தம்பி பசங்க என்னை நம்பி ரிமோட்டைக்
கொடுக்க மாட்டாங்க. உடைச்சு விடுவேன் என்ற
பயம் அவர்களுக்கு. இந்த இடத்தில் ஒரு flash back
சவுண்ட் மியுசிக்கோடு போட்டுக் கொள்ளவும்.
டொங்க டொய்ங் ...

தமிழன் எக்ஸ்ப்ரஸில் இருந்து தினமணிக்கு
வந்தேன். முதல் பிரச்சினை அன்றாட பரபரப்பு.
வாரத்தில் நான்கு நாட்கள் தூங்கிவிட்டு
இரண்டு நாட்களில் வேலை செய்வது வார இதழ்.
ஏழாவது நாளில் மீட்டிங் என்ற தலைப்பில்
நல்ல டிபன் சாப்பிடுவது வழக்கம்.தினமணியில்
எவனைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும்
ஓடிக்கொண்டே இருக்கிறான். ஐம்பது வயதில்
நமக்கு அடிக்கடி மூச்சு வாங்கியது.

இரண்டாவது பிரச்சினை தொழில் நுட்பம். கம்புடரில்
தான் வேலை செய்ய வேண்டும். பக்கத்து சீட்டில்
இப்போது பிரபலம் ஆகி விட்ட பா கிருஷ்ணன்.
கிருஷ்ணன் ஒன்று ,நம்முடைய நண்பர் . இரண்டாவது ,
ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களிலும், தினமணி
போன்ற நாளிதழ்களிலும் கொட்டை போட்டவர் . ஆகவே
என்மீது அனுதாபத்தோடு இருப்பார்.

கீபோர்டை மடியில் வைத்துக்கொண்டு `கிருஷ்ணா, இந்தக்
கர்சரை எப்படி இழுப்பது` என்று கேட்பேன். எவ்வளவுதான்
நல்லவராக இருந்தாலும் கிருஷ்ணனிடம் ஒரு பிரச்சினை
உண்டு. இல்லை இல்லை.இரண்டு பிரச்சினைகள் உண்டு.
கிருஷ்ணனுக்கு உதாரணம் இல்லாமல் பேச வராது.
சாப்பாட்டைத் தவிர வேறு உதாரணம் தெரியாது.

கிருஷ்ணன் `கீ போர்ட் தான் சாதம்னு வெச்சுக்கோ. கர்சர் தான்
ஸ்பூன்` என்று தொடங்குவார். அது பசி வேளை என்பதால்
எனக்கு எரிச்சல் வந்துவிடும். `கிருஷ்ணா, உதாரணம்
வேணாம். நேரா சப்ஜெக்டுக்கு வா` என்பேன். கடைசி வரை
சாப்பாடு இல்லாமல் அவரால் பேச முடியாது. சாப்பாட்டு
நேரத்தில் எனக்கு எதையும் புரிந்து கொள்ள முடியாது.

நல்ல வேளையாக என்னை மதுரைக்கு மாற்றி விட்டார்கள்.
உதாரணங்கள் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்தேன்.

நண்பர்கள் , பார்த்து கமென்ட் போடவும். பா கி இங்கே இருக்கிறார்.