ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான வழி

பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில் ‘ கர்மவினை ‘ பற்றி அவரிடம் பலமுறை கேட்கப்பட்டது. மனிதர்களின் துன்பங்களுக்கு அவர்களுடைய முற்பிறவிச் செயல்தானே காரணம் என்றும் கேட்கப்பட்டது. பலமுறை அவர் பதில் சொல்வதைத் தவிர்த்தார்.முடிவாக ஒரு நாள் “ நீங்கள் எய்தப்பட்ட அம்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறீர்கள்; நான் அடிபட்ட பறவைக்கு  நிவாரணமும் நிம்மதியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.என்றார்.அவர்.  
 
ஈழத்தமிழர் பிரச்சினையும் கிட்டத்தட்ட இதே நிலைமையில்தான் இருக்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவை ,  இனப் படுகொலைக்காகவும் , மனித உரிமை மீறலுக்காகவும்  தண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தின்  சில அரசியல் தலைவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் . இவர்களிடம் அம்பைப் பற்றிய ஆராய்ச்சி இருக்கிறது. இவர்களுடைய சூரத்தனத்தால் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்

இலங்கையில் நடந்த போரைத் தடுப்பதற்காகப் பாடுபட்டவர் நார்வேயைச் சேர்ந்த முன்னாள் அமைதித் தூதர் எரிக் கோல்ஷீம். ஆஃப்டன் போஸ்டன்  என்ற இதழுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் , விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகும் தமிழர் பிரச்சினை தீர்க்கப் படவில்லை. தமிழர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் .இலங்கை அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் அங்கே இன மோதல்  மீண்டும் வெடிக்கும் “ என்று கூறியுள்ளார். 

துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ , அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு : குடி பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள்  சொந்த இடங்களுக்குப் போய்ச்சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள்; தமிழ் மொழிக்கு சிங்கள் மொழிக்குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை , சிங்களவர்களுக்குச் சமமாகத்  தமிழர்களுக்கு உரிமைகள் ; இந்தியாவில் உள்ளதுபோல் சமஷ்டி அரசியல் அமைப்பு ; ராஜிவ்- ஜெயவர்தன ஒப்பந்தம் அமல் படுத்துவது .... போன்றவற்றை இலங்கை அரசு முனைந்து செய்து முடிக்க வேண்டும்  என்கிறார். 
கட்சிக்காரர்கள்  முன்னிலையில்  பொதுக்கூட்ட மேடையில் “ என் வாழ்நாளிலேயே தமிழீழத்தைக் காண வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை “ என்று கூறினார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நடத்திய டெசோ மாநாட்டில் தமிழீழம் குறித்த ஓசை எழுப்பப்படவில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்திற்குப் பணிந்து கருணாநிதியும் அவரைச் சார்ந்தவர்க்ளும் நடப்பதாகத் தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 

“ஐ. நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள். நான் தமிழீழத்தை அடைந்து விடுவேன் “ என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். 
“ உலக நாடுகள் ஆதரவு இல்லாமல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை . எனவே உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவோம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். 
 இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் இந்தியாவிற்கு வெகு அருகிலே நடந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் நம்முடைய சொந்த பந்தங்கள் என்ற போதிலும் , ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காதது ஏன் என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது. 

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ‘ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு முன்பாக மக்கள் அளித்த சாட்சியங்கள் , இலங்கை ராணுவத்திற்கு எதிராக இருக்கின்றன. விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியும்  சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. என்பது கூட தமிழ்நாட்டில் முழுமையாக உணரப்படவில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்தச் சேதி எட்டவே இல்லை.இது ஏன் என்ற கேள்வி நம்மை வதைக்கிறது.

சீமானை விட்டு விடுவோம். அவருடைய கருத்தில் சீரியசாக எதுவும் இல்லை. திமுக தலைமையும் , வி. சி. கட்சித் தலைமையும் , முதலில் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு , இப்போது தில்லியில் உள்ள அயல் நாட்டுத் தூதரகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் 22-ம் தேதியன்று, ஐ நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு அளித்தன; சீனா, க்யூபா உட்பட்ட  15 நாடுகள் எதிர்த்தன; 8 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பதை  இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும். 

தீர்மான வாசகத்தில், “ in consultation with and with the concurrence of the government of Sri Lankaஎன்று  மாற்றம் செய்யப்பட்ட பிறகே  அதை நிறைவேற்ற முடிந்தது என்பது முக்கியமான விஷயம். ராஜபக்சேவை குற்ற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் , அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங்களோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். தழ்நாட்டு அரசியல் சக்திகளால் உலக அரங்கில் ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முடியாது. அம்மையப்பனைச் சுற்றாமல் அகில உலகத்தையும் சுற்றி வருவது வெற்றியைத் தராது. இந்தக் களத்தில் இந்திய மக்கள்தாம் அம்மையப்பன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஈழத் தமிழருக்கு நிவாரணமும் வாழ்வுரிமையும் பெற்றூத் தரப் போவது இந்த்ய நாடுதான். கருணாநிதியால் இது கை கூடாது. முள்ளிவாய்க்கால் போரின்போது மெளனம் காத்தவர் அவர். அவரும் , அவருடைய டெசோ அமைப்பும் ஸ்டாலினை முன்னிறுத்தி செய்கின்ற முயற்சிகளெல்லாம் ஸ்டாலினுக்கு பப்ளிசிடியைப் பெற்றுத்தருமேயன்றி , பாதிக்கப்பட்டவர்களுக்கு  அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.
இன்று  நம் முன் உள்ள தீர்வு ஒன்றுதான் : தமிழர் கவலையை இந்தியக் கவலையாக மாற்ற வேண்டும் . இந்திய மக்களிடையே அனைத்து மொழிகளிலும் ஈழத்தமிழர் படும் பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் ஓங்கோலிலும், ஒரிஸ்ஸாவிலும் , பரோடாவிலும் , பஞ்சாபிலும் , அஸ்ஸாமிலும், பீஹாரிலும் பொதுக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நட்த்த வேண்டும். 

நம்முடைய சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியாவெங்கும் ஏற்பட்டால், இந்திய அரசு தானாக நடவடிக்கை எடுக்கும். புவிசார் அரசியல் நெறிப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாக  எந்த நாடும் செயல்பட முடியாது  இந்தியாவின் வல்லமையே ஈழத்தமிழருக்கு பக்க பலமாக இருக்கும், இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும். இதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். 

தமிழ்நாட்டு அரசியலில் தலை தூக்க முடியாதவர்கள் லண்டன் நகரிலும், ஐரோப்பாவிலும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஆற்றும் வீர உரையால் ,  எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது ஈழத்தமிழர்களால் எவ்வளவு  விரைவில்  உணரப் படுகிறதோ அவ்வளவு விரைவில் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். 
 வங்க தேசத்தின் விடுதலைக்கு இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சிதான் காரணம் என்பதையும் , அதை உண்டாக்கியது ஜன சங்கம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் கிழக்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜுபிர் ரஹ்மான். ஆனால், பாகிஸ்தான் அரசின் ஆட்சியில் இருந்த ஜுல்ஃபிகர் புட்டோவின் பிடிவாதத்தால் , கிழக்கு வங்காளத்து மக்களுக்கு ஜனநாயக  உரிமைகள் மறுக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவம் அங்கே ஒரு படுகொலையை நடத்தியது. இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக  இந்தியாவில் குடியேறினர்.
அடல் பிஹாரி வாஜ்பாயியின் தலைமையில் “ வங்க தேசம் விடுதலை பெற வேண்டும் “என்ற போராட்டம் ஜனசங்கத்தால் நடத்தப் பட்டது. சென்னை கடற்கரையில் சீரணி அரங்கத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப் பட்டது. இறுதியாக தில்லியில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க்விலிருந்து வந்த எட்வர்ட் கென்னடி இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்துப் போனார். 
வங்க தேசத்திற்கு இந்தியா கொடுத்த  ஆத்ரவைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் நம் மீது படையெடுத்தது.  இதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால்  விடுதலை பெற்ற வங்க தேசம் உருவானது.
ஈழத் தமிழருக்கு வாழ்வு தர முடியும் என்ற வாய்ப்பு இப்போது தமிழகத்து பாஜகவின் முன் நிற்கிறது.  முதலில் அகில இந்தியத் த்லைமையிடம் இது குறித்து வற்புறுத்த வேண்டும். பிறகு அனைத்து மாநிலத் தலைமைகளையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.இலங்கை அரசைப் பணியச் செய்து , ஈழத் தமிழருக்கு  வாழ்வு கிடைக்க வழி செய்திட வேண்டும் 

சீமானால் சிந்திக்க முடியாததை , கருணாநிதியால் சாதிக்க முடியாத்தை,  வைகோவால் நடைமுறைப்படுத்த முடியாத்தை,  , மார்க்ஸிஸ்டுகளல் செயல் படுத்த முடியாததை , ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு  அப்பாற்பட்டதை , சோனியா காந்தி செய்ய விரும்பாததை பாஜகவால் செய்ய முடியும்.இதற்கான  முனைப்பை தமிழக பாஜக ஏற்படுத்த வேண்டும் என்பது என்ன்னுடைய பணிவான வேண்டுகோள்.வரலாற்றுப் பணி நம் வாசலில் காத்திருக்கிறது

சில குறிப்புகள் :
1830       --  மலையகத்தில் தொழிலாளர்களாகத்  தமிழர்கள் குடியேற்றம்
1944       -- அகில இந்திய இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி.
                               / ஜி ஜி பொன்னம்பலம்
1948       -- குடியுரிமைச் சட்டம் – 10,00,000 மக்கள் நாடற்றவரானார்
1948       -- இலங்கைத் தமிழீழக் கட்சி உதயம்
1956       -- பண்டாரநாயகா பிரதமர் – சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி
1961       -- சிறிமாவோ பண்டாரநாயக – பிரதமர் – தமிழ்ப் பகுதிகளிலும்
                                               சிங்களமே ஆட்சி மொழி
1964      -- சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்
1965      -- டட்லி சேனநாயகா – பிரதமர் தமிழரசுக் கட்சி,தமிழ்க் கங்கிரஸ் கட்சி
                                   ஆதரவு.
1972      -- புதிய அரசியலமைப்புச் சட்டம்
1974      -- யாழ்ப்பாணம் – உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – போலிஸ் வன்முறை
1977      -- ஜெயவர்தனா பிரதமர் – இனக் கலவரம்
1981      -- இனக் கலவரம்
1983      -- இனக் கலவரம்
1983      -- இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
1984      -- இலங்கைப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி
1985      -- சகோதர யுத்தம் / விடுதலைப் புலிகளின் வளர்ச்சி
1987      -- ராஜிவ் காந்தி – ஜெயவர்தனா உடன்பாடு – 13 வது அரசியலமைப்புத்
                                                        திருத்தம்
1987      -- இந்திய அமைதிப் படை
1991      -- ராஜிவ் காந்தி கொலை
2000     -- நார்வே தலையீடு – போர் நிறுத்த உடன்பாடு
2008     -- இறுதிப் போர். 

5 comments:

Sadagopan said...

இலங்கையில் வசித்து வருகின்ற தமிழர்கள் எவருக் கும் தமிழக அரசியல் வாதிகள் மீது அறவே நம்பிக் கை கிடையாது. முதலில் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். அங்கு தமிழத்தில் உள்ளதைவிட அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. ஏராளமான தலைவர்கள் இருக்கிட்ன்றனர். தமிழர்களி டையே பல பிரிவினர் உள்ளனர். அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஹிந்துக்கள் ஆவர்.ஹிந்து என்ற உணர்வுடன் அவர்கள் ஒன்றிணைத்து செயல் பட்டால் இங்கு நாடுதழுவிய ஆதரவினை திரட்டுவது சுலபம். தமிழகத் தலைவர்களால் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடிய வில்லை. செய்யவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி. போன்ற அகில பாரத ஹிந்து அமைப்புக்கள் இலங்கை ஹிந்துக்களுக்கு (தமிழர்களுக்கு) ஆதரவாக ஒரு நாடுதழுவிய இயக்கத்தை துவக்கினால் மட்டுமே மத்திய அரசினை செயல்படவைக்க முடியும். தமிழக நடிகர்கள், அரசியல் வாதிகள்,தமிழ் பெயரில் மறைந்து கொண்டு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்ற கிறிஸ்துவ அமைப்புகளால் எதுவும் சாதிக்க முடியாது.

Aggraharam.blogspot.com said...

தமிழன் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை சோழ சேர பாண்டியன் அன்று,இன்று ஜாதி பிராமணன், பிராமணன் அல்லாதோர் என்று. காஷ்மீரத்து பாண்டிட்டுக்களையே காப்பாற்றாத ஹிந்து அமைப்புகள் நாடு தாண்டி இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறது.அல்லது இவ்வளவு நாள் என்ன சொல்லிக்கொள்ளும் படி செய்தது?

XXXXXXXXXXXXXXXXXX said...

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் முதலில் ஒன்று கூடட்டும். அவர்கள் போராட்டத்திற்கு இந்தியா அதரவு தெரிவித்து விடியல் பெற்றுக் கொடுத்தால் நல்லது. இங்கே நம் மக்களைத் தூண்டி விட்டு அரசியல் செய்வது மிகவும் ஆபத்தானது.

எனக்கென்னவோ, ஈழம் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மேற்கண்ட போராட்டங்கள் தூண்டி விடப்படுவதாகப் படுகிறது.
ஈழம் கிடைத்துவிட்டால் இத்தனை காலம் நல்ல உட்கட்டமைப்புடன் வாழ்ந்துவந்தவர்கள் திரும்பவும் ஈழம் வர நேரிடலாம். அதை புலம்பெயர்ந்தவர்களே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

sathya said...

தூங்குவதுபோல் நடிக்கும் பாஜகவினை கடைசி வரியில் எழுப்ப முற்பட்டிருக்கிறீர்கள். கடைசி வரியை கடைசியில் பார்ப்போம் என்று அவர்கள் விட்டுவிட்டால். ஜனசங்கத்தில் இருந்தது போன்ற தீர்க்கதரிசிகள் பாஜகவில் செயல்படுத்தும் நிலையிலிருக்கிறார்களா? உண்மையில் தேசியத்தில் அக்கறை இருக்குமானால் இங்கு ஈழத்தமிழர் ஆதரவு தனித்தமிழ் இயக்கங்களின் கைகளுக்கு தானாகச் செல்லும் வரை வேடிக்கைப் பார்த்திருப்பார்களா? நீங்கள் கோரிக்கை விடுக்குமுன் இவர்கள் செயல்பட்டிருக்க வேண்டாமா? இல்லை காங்கிரஸைப் போல இவர்களுக்கும் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? இப்போதாவது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் சரி. இவர்களால் நீண்ட நாட்களாக சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் காஷ்மீரிகளுக்கு என்ன செய்ய முடிந்தது? இவர்கள் காந்திக்கு முந்தைய கார்பொரேட் காங்கிரஸ் போல செயல்படுகிறார்கள். எப்போது மக்களோடு தோள் கொடுத்த முற்படுகிறார்களோ அப்போதுதான் இவர்களுக்கே விடிவு.

karthick said...

{தமிழர்கள்} அனைவருமே ஹிந்துக்களே ஈழத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டு படு கொலை செய்து விட்டார்கள்.மீதமுள்ள ஹிந்துக்களையவது நம் காப்பாற்றி ஆக வேண்டும் அதற்க்கான செயல்முறையை உடனடியாக செய்தாக வேண்டும். ஈழத்திலும்,பங்கலதேஸ்லும்,பாகிஸ்தானிலும் ஹிந்துக்கள் பெருமளவில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.என் பாரத சொந்தங்களே உலக ஹிந்துக்களை ஒன்று திரட்டி போராட இன்றே புறப்படுவோம்,வெற்றி நமக்கே வெற்றி நமக்கே வெற்றி நமக்கே ,பாரத அன்னையே வாழ்க, வாழ்க

Post a Comment