சசிக்கு உதவிய ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய ஆட்சித்திறன் மீதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  ‘விஸ்வரூபம்” திரைப்படத்தை திரையிடுவதற்கு முன் முஸ்லீம் அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட்டாரே? இது அதிகார வரம்பை மீறிய செயல் ஆகாதா என்று சிலர் கேட்கிறார்கள்.  ‘கூடங்குளம் உதயகுமார் காய்ச்சி எடுப்பது மத்திய அரசைத்தானே, நமக்கு என்ன என்று ஆறு மாத காலம் அமைதியாக இருந்தாரே”.  இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே என்றும் சிலர் கேட்கிறார்கள்.  சட்ட சபையில் அதிமுக உறுப்பினர்கள் பேச எழுந்து, இதய தெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரக் கண்மணி, காவிரித்தாய், தமிழக முதல்வர், அம்மா என்று அடைமொழிகளைத் தொடர்ந்து உதிர்த்துவிட்டு, குனிந்து குனிந்து கும்பிட்டுவிட்டு, மானியக் கோரிக்கைக்கு வருவதற்குள் மணிநேரம் ஆகிவிடுகிறது.  இதற்கெல்லாம் எவனுடைய அப்பன் வீட்டுப்பணம் செலவழிக்கப்படுகிறது என்றும் சிலர் கேட்கிறார்கள்.  நியாயமான கேள்விதான்.  அதிமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை உறுதிப்படுத்த அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அம்மையாரைப் புகழ்ந்து துதிபாட நேரம் ஒதுக்கப்பட்டு அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.



திமுகவைப் பொறுத்தவரை அங்கு ஜனநாயகம் என்றாலே ஒவ்வாமைதான்.
குடும்பச் சண்டை முடிந்தால்தானே கொள்கையைப் பற்றிப் பேச முடியும்? அங்கும் கருணாநிதியின் புகழுக்குத்தான் அதிகபட்ச ஒதுக்கீடு.  அதிலும் கருணாநிதி மற்றவர்களை நம்புவதில்லை.  தன் புகழைத்; தானே பாடி, தானே கேட்கும் விகாரமான மனோநிலை அவருடையது.



இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதானே.  நீ புதிதாக என்ன சொல்லப் போகிறாய் என்று நீங்கள் முணுமுணுக்க வேண்டாம்.  இது சட்டமன்ற நெறிமுறைகள் பற்றியோ, ஜனநாயகத்தைப் பற்றியோ அல்ல.  இது, ஜெயலலிதா, சசிக்கு செய்த உபகாரம் பற்றி.



இந்த இடத்தில் சசி என்பது போயஸ் தோட்டத்து சசிகலா அல்ல, சசிரேகா என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  சசிரேகா என்பவர் இன்னும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை.



பதின்மூன்று வருடங்களுக்கு முன் தினமணியின் சென்னை அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.  அப்போது புதிதாக வந்து சேர்ந்த ரிப்போர்ட்டர்தான் சசிரேகா.  பிறப்பும், வளர்ப்பும் திருவண்ணாமலையில்.  தினமணி வேலை கிடைத்தவுடன் சென்னைக்கு வந்து சிட்லபாக்கத்தில் ஜாகை.



அன்றாடம் ஊருக்கு உபதேசம் செய்யும் பத்திரிக்கை நண்பர்கள், தங்கள்
துறையில் பெண்கள் நுழைவதை விரும்புவதில்லை.  முடிந்தவரை முட்டுக்கட்டை போடுவார்கள்.  ஆனால் என்னுடைய வாக்கு பெண்களுக்குத்தான்.  அதிலும் சசிரேகாவின் பொருளாதாரப் பின்புலம் சொல்லும்படியாக இல்லை என்று தெரிந்தபிறகு பரிவு அதிகமாகிவிட்டது.




தினமணிக்கு வருவதற்கு முன் சசிரேகா  மருத்துவமனை ஒன்றில்  வேலை செய்தார்.  அந்த நினைப்பில் யானைக்கால் நோய் பற்றி ஒரு கால் பக்கக் கட்டுரை எழுதிவிட்டு அதை எல்லோரிடமும் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார் சசிரேகா.  யாரும் அதை மதிப்பதாக இல்லை.  ஒரு சில வாலிபர்கள் மட்டும் ஆபீஸ் வேலை தவிர்த்த காரணங்களுக்காக அந்தப் பெண்ணைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.



இப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது, சசிக்கு ஒரு யோசனை சொன்னேன்.  ‘எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் சகோதரி சேது அம்மாள் பல்லாவரத்தில் இருக்கிறாராம்.  அவர் வறுமையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவர் 90 வயதைக் கடந்தவர்.  அவரைப் பார்த்து ஒரு கட்டுரை எழுது.  ஒருவேளை முதலமைச்சரின் பார்வையில் பட்டால் அவருக்கு நிவாரணம் கிடைக்கலாம்” என்றேன்.



பல்லாவரம் என்று குத்துமதிப்பாகச் சொல்லிவிட்டார்கள். சேது அம்மாளின் வீடு பல்லாவரத்திலிருந்து பலகாத தூரம்.  அது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூருக்கு வெளியே இருந்தது.  வெட்டிப்போட்டால்கூட எட்டிப் பார்க்க ஆளில்லாத தனிவீடு.  உறவுக்காரர் ஒருவர்.  அவரே முதுமையில் இருந்தார்.  அந்த அறையின் இருட்டில் தெரிந்தது ஒரு பாய் மட்டுமே.  வயதானவர்கள், வறுமையால் தாக்கப்பட்டவர்கள் உபயோகத்தில் மட்டுமே தென்படும் கிழிந்த பாய். அதில் அவ்வப்போது அசையும் ஒரு துணி மூட்டை.  துணி மூட்டையிலிருந்து வெளிப்படும் ஒரு கையும், அந்த விரல்களுக்கு ஊடே சன்னமான குரலும்.  அவ்வளவுதான் சேது அம்மாள்...



தன்னுடைய திறமையைக் கொண்டு சசிரேகா ஒரு கண்ணீர்க் கதையை எழுதினார்.  அது தினமணியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வையில் பட்டது.  சேது அம்மாளுக்கு ஒரு பெருந்தொகை கொடுக்கப்பட்டது.



ஜெயலலிதா உதவியது சேது அம்மாளுக்குத்தான் என்றாலும் சசிரேகாவுக்கும் பலனிருந்தது.  முதல்வரின் கவனத்தை ஈர்த்தவர் என்ற வகையில் அலுவலகத்தில் மரியாதை கூடியது.