சுகி சிவமும் சமஸ்தானமும்

அறிமுகம்: வழக்கறிஞ்சர் கே. ரவி. மொரார்ஜி பிரதமரரக
இருந்தபோது சந்திப்பு ஏற்பட்டது. மன்மோகன் காலத்திலும்
நட்பு நீடிக்கிறது. தனிப்பட்ட முறையிலும் தத்துவத் தேடலிலும்
நட்பு வலுப்பட்டது. என்னையும் ரவியையும்
ஒன்றாகப் பார்க்கும்போது ரவி மூத்தவர் என்று மக்கள்
முடிவெடுக்கிறார்கள். இரண்டு காரணங்கள்.ஒன்று, ரவியின்
தலையில் முடி இல்லை.இரண்டாவது ரவி சொல்வதை நான்
உடனடியாகச் செயல்படுத்துவது...

ரவியும் சுகி சிவமும் அரை டவுசர் காலம் முதல் நண்பர்கள்.
ரவி வீடு சென்னை மந்தைவெளியில்.சிவம் வீடு மைலாப்பூரில்.
ஒரு புலர் காலைப் பொழுதில் ரவி வீட்டில் ரவியோடு
பேசிக்கொண்டிருந்தேன். சிவம் அங்கு வந்தார். காபியோடு
இலக்கிய சர்ச்சை தொடங்கியது.கவிதைக்கு எது முக்கியம்?
அழகியலா? சமூகப் பயன்பாடா? என்கிற ரீதியில் மத்தாப்புச்
சிதறல்கள். வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே `வீட்டில்
குழாய் ரிபேர் ` என்று சொல்லிவிட்டு சிவம் தன் தரப்பைத்
தொடர்ந்தார். காலை விஜயத்தின் நோக்கம் எனக்குப்
புரிந்து விட்டது. ரவிக்குப் புரியவில்லை. குழாய் ரிப்பேருக்கு
ஆள் அனுப்பிவிட்டு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
சிவத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ரவி வீடு
ஒரு சமஸ்தானம். சு. ரவி, பேரா வ வே சு ,இசைக்கவி ரமணன்
போன்ற அஷ்டதிக் கஜங்களை அங்கே பார்க்கலாம்.
ரவியால் தீர்க்க முடியாத வழக்காறுகள் மேல்முறையீட்டுக்குப்
போகும். ரவியின் மனைவி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்
பட்டம் பெற்றவர். ஓவியர் . வைணிகி. தூர்தர்ஷன் ஏகபோக
தொலைக்காட்சியாக இருந்தபோது செய்தி வாசித்தார்.
ஷோபனா ரவியை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கையில் காசு இல்லையே என்ற பாதிப்பு இல்லாமல்
தொலை நோக்குத் திட்டங்களை நான் உருவாகுகிறேன்
என்றால் அதற்கு ரவி போன்ற நண்பர்கள்தான் காரணம்.


சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில்
பாரதிக்கு பெரிய அளவில் விழா எடுக்கவேண்டும்
என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது. ரவியின் செலவில்
வானவில் பண்பாடு மையம் உருவானது. இதுதான்
இன்று நம்பர் ஒன் பாரதி விழா.

0 comments:

Post a Comment