பாரதியாரும் கணேஷ் மெஸ்ஸும்


அன்புள்ள  பத்மா,

பிறந்த நாளுக்கு என்று தம்பி வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டேன். இதைத் தவிர தினமணி சக ஊழியர் கொடுத்த சட்டையும்  இருக்கிறது.

இந்த ஐம்பூத சட்டைக்குள் நான் குடி புகுந்து 51 வருடங்கள் கடந்து விட்டன. எண் கணிதப்படி இது நல்ல வருடம் என்று நிபுணர் ஒருவர் சொல்கிறார்; பார்ப்போம். அடுத்த முறையும் ஐம்பூதச் சட்டையை அணியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளில் கொஞ்சம் தீவிரம் காட்ட வேண்டும்.

அதற்கு முன் பசியாற வேண்டும்; இன்றைய பிக்ஷை கணேஷ் மெஸ்ஸில். கணேஷ் மெஸ்ஸுக்குப் போகாமல் ஜென்மம் கடைத்தேறாது என்று தினமணி அலுவலக அன்பர்கள் தினமும் ஓதுகிறார்கள். இந்த இரண்டு மாத காலத்தில் என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி 'கணேஷ் மெஸ்ஸில் சாப்பிடுகிறீர்களா?' என்பதுதான்.

‘விட்டுச் சாப்பாடு போல இருக்கும்’ என்று சிபாரிசு செய்தார்கள். அது வாஸ்தவம்தான். நம் வீட்டில் செய்வதைப் போலவே ஏதோவொரு தக்காளிக் காய்க்கூட்டை விடாப்பிடியாய்ப் பரிமாறுகிறார்கள். சிவபெருமானோடு வந்த குண்டோதரனுக்கே சோறு போட்டவர்கள் இந்த ஊர்க்காரர்கள். அதிகம் பேச முடியாது. நாம் சாப்பிடுகிறோமா, மடியில் கட்டிக்கொள்கிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அராஜகமான விருந்தோம்பல்.

சர்வர் வீட்டு மனுஷாளைப் போலவே சட்டைப் பொத்தானைப் போடாமல் கிட்டே வந்து பேசுகிறார். இதுவரை கேள்விப்பட்டதுதான். இங்கே அக்குள் வாடை அனுபூதி ஆகிவிட்டது.

சாப்பிட்டது செரிப்பதற்காகக் கொஞ்சம் நடக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி நடந்து வலது பக்கமாகத் திரும்பினால் சேதுபதி உயர்நிலைப் பள்ளி. பாரதியார் இங்கே ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். சொற்ப காலம்தான். பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகச் சேர்ந்து உலகத்தைச் சீர் செய்யத் தொடங்கிவிட்டார்.

மதுரையில் ஆசிரியராகச் இருந்த போது, என்னைப் போலவே கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருந்தாரா அல்லது செல்லம்மாளைக்  கையோடு அழைத்து வந்து விட்டாரா என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு கணேஷ் மெஸ் அனுபவப்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

பின்னொரு சமயம் மதுரையில் வற்றல் குழம்பு சாப்பிட்டதாகப் பாரதியார்  வாழ்க்கையில் குறிப்பு இருக்கிறது. அது கணேஷ் மெஸ்ஸா என்பது பற்றி கூட யாராவது கட்டுரை எழுதி முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.

ஆட்டுக் குட்டியை மாமிசம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். பிரம்மராய அய்யர் என்ற வாத்தியாரை மாமிசம் தின்னும்படி செய்ய முடியாது என்று ஒரு ஹாஸ்யக் கட்டுரையில் (பெண்) எழுதுகிறார் பாரதியார். இந்த விபரீத யோசனைக்கும் மதுரைச் சாப்பாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

நாம் மீண்டும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கலாமா?

சென்னை காசினோ தியேட்டரில் எதிர்வீட்டுப்  பையனோடு பார்த்தது Grand Slam. எதிர்வீட்டுப் பையனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்த தகவல் வந்தது. அதைக் கொண்டாட, சினிமாவுக்குப் புறப்பட்டான். மரியாதைக்கு 'வர்றியாடா?' என்று கேட்டான். அவன் மனம் மாறுவதற்குள் நான் தயாராகிவிட்டேன்.

13 வருடங்கள் திட்டமிட்டு, 13 மணிநேரம் செயல்பட்டு, 13 விநாடிகளில் பறி கொடுத்தது பற்றிய கதை அது. கோடிக்கணக்கில் மதிப்புடைய வைரங்களைக் கொள்ளையடிக்கும் கதை. அது இருப்பது பாரிஸ் நகரத்து வங்கியின் பெட்டகத்தில். அதன் மீது ஆசைப்படுகிறான் கிழவன் ஒருவன்; ஒத்தாசைக்கு மகள். மகள், அந்த வங்கியில் வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் முன்னேற்பாடுகளைச் செய்கிறாள். பிறகு அப்பனும் மகளுமாய் ஒரு நல்ல முகூர்த்தத்தில் வைரங்களோடு அம்பேல் ஜூட். இத்தாலிக்குப் போகிறார்கள். நடைபாதை ஓட்டலில் நிம்மதியாம டீ சாப்பிடுகிறார்கள்.  மேசை மீது வைரங்கள் உள்ள கைப்பை. சைக்கிளில் வேகமாக வரும் ஒருவன் பையோடு எஸ்கேப் ஆகிறான். மகள் போடும் சத்தத்தில் கூட்டம் கூடுகிறது. 'ரொம்ப நஷ்டமா?' என்று கேட்கிறார் ஒருவர். அவள் சொன்ன பதில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; தியேட்டரில் தமிழ்ப் பெருமக்கள் எழுந்து நின்று விட்டார்கள்.

Chennaionline / subbu

(மதுரைப் பதிவு-7)

நவம்பர் 23, 2001


அடுத்த முறையும் ஆங்கிலப் படங்கள்தான்.

அன்புடன்,

சுப்பு

0 comments:

Post a Comment