பசிவேளையில் பாகி


தொழில்நுட்பத்திற்கும் எனக்கும் வெகு தூரம்.
வீட்டில் தம்பி பசங்க என்னை நம்பி ரிமோட்டைக்
கொடுக்க மாட்டாங்க. உடைச்சு விடுவேன் என்ற
பயம் அவர்களுக்கு. இந்த இடத்தில் ஒரு flash back
சவுண்ட் மியுசிக்கோடு போட்டுக் கொள்ளவும்.
டொங்க டொய்ங் ...

தமிழன் எக்ஸ்ப்ரஸில் இருந்து தினமணிக்கு
வந்தேன். முதல் பிரச்சினை அன்றாட பரபரப்பு.
வாரத்தில் நான்கு நாட்கள் தூங்கிவிட்டு
இரண்டு நாட்களில் வேலை செய்வது வார இதழ்.
ஏழாவது நாளில் மீட்டிங் என்ற தலைப்பில்
நல்ல டிபன் சாப்பிடுவது வழக்கம்.தினமணியில்
எவனைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும்
ஓடிக்கொண்டே இருக்கிறான். ஐம்பது வயதில்
நமக்கு அடிக்கடி மூச்சு வாங்கியது.

இரண்டாவது பிரச்சினை தொழில் நுட்பம். கம்புடரில்
தான் வேலை செய்ய வேண்டும். பக்கத்து சீட்டில்
இப்போது பிரபலம் ஆகி விட்ட பா கிருஷ்ணன்.
கிருஷ்ணன் ஒன்று ,நம்முடைய நண்பர் . இரண்டாவது ,
ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களிலும், தினமணி
போன்ற நாளிதழ்களிலும் கொட்டை போட்டவர் . ஆகவே
என்மீது அனுதாபத்தோடு இருப்பார்.

கீபோர்டை மடியில் வைத்துக்கொண்டு `கிருஷ்ணா, இந்தக்
கர்சரை எப்படி இழுப்பது` என்று கேட்பேன். எவ்வளவுதான்
நல்லவராக இருந்தாலும் கிருஷ்ணனிடம் ஒரு பிரச்சினை
உண்டு. இல்லை இல்லை.இரண்டு பிரச்சினைகள் உண்டு.
கிருஷ்ணனுக்கு உதாரணம் இல்லாமல் பேச வராது.
சாப்பாட்டைத் தவிர வேறு உதாரணம் தெரியாது.

கிருஷ்ணன் `கீ போர்ட் தான் சாதம்னு வெச்சுக்கோ. கர்சர் தான்
ஸ்பூன்` என்று தொடங்குவார். அது பசி வேளை என்பதால்
எனக்கு எரிச்சல் வந்துவிடும். `கிருஷ்ணா, உதாரணம்
வேணாம். நேரா சப்ஜெக்டுக்கு வா` என்பேன். கடைசி வரை
சாப்பாடு இல்லாமல் அவரால் பேச முடியாது. சாப்பாட்டு
நேரத்தில் எனக்கு எதையும் புரிந்து கொள்ள முடியாது.

நல்ல வேளையாக என்னை மதுரைக்கு மாற்றி விட்டார்கள்.
உதாரணங்கள் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்தேன்.

நண்பர்கள் , பார்த்து கமென்ட் போடவும். பா கி இங்கே இருக்கிறார்.

2 comments:

latha said...

cursor dhan spoon comparison nanraaga irukkiradu.

Paa Krishnan said...

சுப்பு சொன்னது யாவும் உண்மை. ஆனால், அதே சமயம் கணினி தொடர்பானதை சாப்பாட்டுவேர் (ஸாரி, அது சாஃப்ட்வேர்..) என்று வைத்தார்கள். அது போதாது என்று சிப்ஸ் (வறுவல்) ஆப்பிள் என்று சாப்பிடுவதே கணினித் துறையில் பேசுவது ஏன்..
பாகி

Post a Comment