மதுரையிலிருந்து

Chennaionline / subbu

ஆகஸ்டு 2001.

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

மதுரைக்கு வந்து ஒரு வாரமாகிறது. ஆரம்ப சூரத்தனமாய் ஓட்டலில் தங்கிவிட்டேன். கைப்பணம் கரைந்துவிட்டது. தினமணி அலுவலக நண்பர்களின் உதவியால் நகரத்தின் மத்தியில் உள்ள மேன்ஷனில் இன்று குடியேற்றம். 'குவாரண்டைன்' முடிந்த காலராக்காரனைப் போல உணர்கிறேன்.

மேன்ஷனில் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இதை நினைத்தபடியே மாடித் தாழ்வாரத்தில் நடந்தால், ஜன்னல் வழியாக மீனாட்சியின் கோபுரம் என்னைப் பார்த்தது.

ஆகவே அறை வாசத்தின் முதல் நடவடிக்கை மீனாட்சி கோவில். வரும் வழியில் மீனாட்சி படம் ஒன்றை வாங்கித் துணைக்கு வைத்துக்கொண்டேன்.  உருவப் படங்கள் மீது எனக்கு அதிக அபிமானம் இல்லைதான். இருந்தாலும் யோசித்துப் பார்க்கும்போது எனக்கும் மீனட்சிக்கும் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. மதுரையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இடது கையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம். மற்றபடி லட்சாதிபதியில் தொடங்கி லாட்டரி சீட்டு விற்பவர் வரை எல்லோரும் இடது காதுக்கருகில் செல்போனைப் பொருத்திய இடது கையோடுதான்.

ஓட்டலில் தங்கியிருந்த நாட்களில் கைவசமிருந்த தேவி மாஹாத்மியத்தைப் படித்து முடித்தேன். மொத்தமும் படித்த பிறகு மாஹாத்மியமா, மஹாத்மியமா எது சரி என்ற கேள்வி முன்னணியில் நிற்கிறது. பதிலை உனக்குத் தெரிந்த பண்டிதர்களிடம் கேட்டுச் சொல்லவும். இந்திப் பண்டிதர் என்ற முறையில் நீயாக எதையும் சொல்லக் கூடாது. இது சமஸ்கிருதம்.

மீனாட்சி புத்தக நிலையத்தில் 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' வாங்கினேன். எழுதியவர் ஜெயகாந்தன். நாலு பக்கங்களைத் தாண்டுவதற்குள் யாரோ ஒரு மேன்ஷன் நண்பர் வந்து 'அருமையான புத்தகம்'’ என்று சொல்லி வாங்கிக்கொண்டு போய்விட்டார். அவசரத்தில் அவருடைய பெயரையோ, அறை எண்ணையோ சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை. பொற்கைப் பாண்டியனைப் போல ஒவ்வொரு கதவாகத் தட்டவும் தைரியமில்லை. இது 'ஒரு மேன்ஷன்வாதியின் இலக்கிய அனுபவமாக இருக்கட்டும்' என்று விட்டுவிட்டேன்.

எப்படியும் காலையில் எல்லோரும் ஒரே வரிசையில் நின்றபடி பல்துலக்கி, சாக்கடையில் ஒரே நேரத்தில் எச்சில் துப்புவது என்ற சாங்கியம் இருக்கிறது. புத்தகத்தைக் கொண்டு போனவர் அப்போது மாட்டுவார்.

எதிர் அறையில் இருக்கும் அன்பர் தீவிர கிரிக்கெட் உபாசகராக இருக்க வேண்டும். அதைத்  தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.   வால்யூமை முழு அளவில் வைத்துவிட்டார். அவரிடம் டிவி இருக்கிறது என்ற விவரம் இந்த மேன்ஷனிலிருந்து வெளியேறி, கோபால கொத்தன் வீதியின் இடைஞ்சல்களைக் கடந்து, தானப்ப முதலித் தெருவைத் தாண்டி, மேல கோபுர வீதியில் நுழைந்து மீனாட்சியின் கோபுரத்தில் முட்டிக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

முதல் நாளிலேயே நான் மோதலை விரும்பவில்லை. அந்த அறைக்காரரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிவிட்டு பேச்சுவாக்கில் டி.வி. வால்யூமைக் குறைத்துவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தால், அவர்  அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார். நீ அவசரப்பட வேண்டாம். அவர் டி.வியை அணைத்து விட்டுத்தான் போனார்.

டி.வி. நிமித்தமாக ஏகப்பட்ட முயற்சி எடுத்ததில், டாய்லெட் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

டாய்லெட் அறையில் சின்ன பிரச்சினை. அது சின்னதாக இருப்பதுதான் பிரச்சினை. ஓரளவு முயற்சி செய்தால் நம்மை ஒருவாறு உள்ளே அடைத்துக் கொள்ளலாம். ஆனால் பக்கெட்டுக்கு இடமிருக்காது. பக்கெட் உள்ளே போக வேண்டுமென்றால் நாம் வெளியே இருக்க வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாள் இல்லை என்பதால் எல்லோரும் பாண்டவர்களின் செருப்பைப் போல பக்கெட்டை வெளியேதான் வைக்கிறார்கள் என்பதையும், டாய்லெட் குழாயில் காற்று மட்டும்தான் வரும் என்பதையும், காயசுத்திக்குக் காற்று பயன்படாது என்பதையும் மறுநாள்தான் தெரிந்துகொண்டேன்.

முதல் நாள் எப்படிச் சமாளித்தேன் என்பதைக் கடிதத்தில் எழுத முடியாது; நேரில் சொல்கிறேன்.

மற்றபடி மதுரை சுவாரஸ்யமாய் இருக்கிறது.

அன்புடன்

சுப்பு

0 comments:

Post a Comment