மறுபடியும் மதுரை


Chennaionline / subbu

அக்டோபர் 2001

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

காலையில் தியானம் செய்வதற்கு முன் மீனாட்சி படத்துக்கு அருகே தசாங்கம் ஏற்றலாம் என்று ஒரு யோசனை. காதி பவனில் இருந்து வாங்கி வந்த பாக்கெட்டைப் பிரித்தால் தசாங்கம் மாவு வடிவத்தில் இருக்கிறது.

இதென்ன மாவிளக்கு மாவா, இதை எப்படி விளக்காக்குவது என்ற குழப்பத்தில் இருந்த போது நாகராஜன் வந்தார். நான் சொல்லாமலே அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டார்.

'சரியாகப் பாருங்கள், உள்ளே ஒரு கூம்பு இருக்கும். அதில் பொடியை நிரப்பித் தட்டில் வைக்க வேண்டும்' என்று சொல்லி, குட்டித் தட்டு ஒன்று கொடுத்தார்.

தினமணி நாளிதழைத் தரையில் விரித்து தசாங்கப் பாக்கெட்டை கிழித்துக் கொட்டுவதற்கு ஆயத்தம் செய்தேன். மீண்டும் நாகராஜன் வந்துவிட்டார்.  என் செயல் திறமையில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

தினமணிக்கு வேலை இல்லை, கூம்பில் தசாங்கத்தை நிரப்பி, செல்லமாக ஒரு தட்டுத் தட்டினார். அது சமத்தாக உட்கார்ந்து கொண்டது, மன்னிக்கவும் நின்றுகொண்டது.

'ஏத்தி  வெச்சிருங்கோ' என்று சொல்லி வெளியே போனவர், மீனாட்சி படத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த தலையணையை உற்றுப் பார்த்தார். 'இது எதற்கு?' என்றார்.

ராஜயோகப் பயிற்சியில் இடது பாதத்தை ஆசன வாய்க்குக் கீழே வைக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் அப்புவைப் போல விசேஷ முயற்சி எடுத்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு இடது பாதம் ஆசன வாய்க்கு அருகே குடியேறியிருக்கிறது.

ஆனால் வலது காலை எங்கே வைப்பது என்பதை நானே உணர்ந்துகொள்ளும்படி விட்டுவிட்டார்கள். 'என்னை என்ன செய்வதாக உத்தேசம்' என்று சுயாட்சி கேட்கும் வலது காலைத் தாஜா செய்யத் தலையணையை முட்டுக் கொடுத்து வந்தேன்.

அதையெல்லாம் அன்பரிடம் விளக்கிச் சொல்ல முடியாததால், சுருக்கமாக 'தியானத்திற்கு' என்றேன். அவர் அவசரமாக வெளியேறியதைப் பார்த்தால் அவருக்கு என்னுடைய வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன்.

தசாங்கம், புகை வளையங்களைப் போட ஆரம்பித்தது. தேவியின் சஞ்சாரம் இதனால் தடைப்படும் என்று அதை அப்புறப்படுத்தி அடுத்த தட்டில்  வைத்தேன். என்னைப் பொறுத்துக்கொள்ளும் பராசக்தி என்பொருட்டுப் புகை வளையங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அனாஹதத்தில் 'ஓம்' என்ற ஒலியைக் கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நம்முடைய முயற்சியால் மட்டும் நடக்கக்கூடியது அல்ல. உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கித் தாழ்ப்பாள் ஒலி, செருப்பு ஒலி, சினிமா ஒலி, சிரிப்பு ஒலி, சிரிப்பாய்ச் சிரிக்கும் ஒலி எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.

அப்புறம் இன்னொரு பிரச்சினை: இந்தப் பிரணவ ஒலி நாமாகச் சொல்வதா, தானாக ஒலிப்பதா என்ற சந்தேகம் வருகிறது.

நம்மைப் போன்ற ஜடங்களுக்கு உடனுக்குடன் அனாஹத சித்தி ஆகாது, இது சொந்த சாகித்யம்தான் என்று நிச்சயித்தால் நம்முடைய கவனத்தில் போட்ட கல்லாக, ஓம்.

மனித முயற்சி இந்தப் பாடுபடுகிறதே, பிறகு கந்தர்வர்கள், தேவர்கள், சித்தர்கள், யக்ஷிணிகள், பிரம்மாக்கள் எல்லோரும் எப்படித் தவம் செய்வார்கள்? எப்படி அளப்பரிய ஆனந்த எல்லையைத் தாண்டுவார்கள்? என்று கணக்குப் போட்டேன்.

மற்ற ஜீவராசிகளைப் பற்றி நமக்குத் தெரியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த எழுத்தாளனால் ஏறிப் போக முடியாது. அவள் இறங்கி வருவதுதான் சுலபம், நியாயம்.

அதற்காகத் தியானத்தை விட முடியாது. காலையில் தலையணையோடு வடக்கு நோக்கி உட்காருவதும், கணக்காக 36ஆவது நிமிடத்தில் தேவர்கள் செய்த இடைஞ்சலால் எழுந்திருப்பதும் இனிமேலும் தொடரும்.

இந்திராதி தேவர்களுக்கு வேலை வேண்டாமா?

அன்புடன்

சுப்பு

0 comments:

Post a Comment