அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை

அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை
சுப்பு / கல்கி / 3 ஏப்ரல் 2012
 
சில இலக்கிய விருதுகள் எந்த அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்ற பேச்சு வந்த போது , பிரபல எழுத்தாளர் ரா. கி. ரங்கராஜன் நெத்தியடியாகச் சொன்னார் , “ கதையில் கதை இருக்கக் கூடாது; இருந்தால் நமக்கு இத்தகைய விருதுகள் கிடைக்காது “  என்று.
 
ஜி. பி. சதுர்புஜனைப் பொருத்தவரை , தோசை என்றால் மாவு இருக்க வேண்டும்; தொட்டுக் கொள்ள சட்னி இருக்க வேண்டும் என்பது செய்முறை. பாதி வழியில் முற்றுப் புள்ளி வைத்து விட்டு , வாசகனைப் பழி வாங்கும் மனோபாவம் அவரிடம் இல்லை. அவருடைய கதைகளில் கதை இருக்கிறது; காதல் இருக்கிறது; கண்ணீர் இருக்கிறது; கவிதைத் தனமான கர்வம் இருக்கிறது; எதிர்பார்ப்பு இருக்கிறது,ஏமாற்றம் ,எக்காளம்  எல்லாமே இருக்கின்றன.
 
எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்களோ , அத்தனை கதைகள் இருக்கின்றன என்பது படைப்புலகத்தின் ரகசிய விதி. இதற்கு மேலே போய்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் இருக்கின்றன என்ற புரிதலோடு எழுதுகிறார் சதுர்புஜன்.
 
உதாரணத்திற்கு ஆனந்த். ஆனந்தின் கதையை விவரிக்கும்போதே நமக்கும் அவனுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனுடைய காதலில் நமக்கு மூச்சு முட்டுகிறது. அவனுடைய உழைப்பில் நமக்கு வியர்வை வருகிறது. அவனோடு பயணப்படும் நாம் கதையின் முடிவில் அவனுடைய நடவடிக்கைக்குக் கையாளாகி விடுகிறோம்.
 
இன்னொரு கதை கணக்கு வாத்தியார் வெங்கடேசமூர்த்தி பற்றியது. தப்பு தப்பு. கதை , மாணவன் அறிவுமதி பற்றியது. இல்லை, இல்லை. கதை, தலைமை ஆசிரியரைப் பற்றியது. நாலு பக்கக் கதையில் மூன்று பேருடைய குணாம்சங்கள் போட்டுடைக்கப்படுகின்றன.
 
அன்பு, ஆற்றாமை இதையெல்லாம் படித்து அலுத்து விட்டது; எங்களுக்கு அதிர்ச்சி வேண்டும் என்று கேட்கும் வாசகர்களுக்காக ஒரு பார்சல் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.
 
மூன்று கதைகளைப் பற்றித்தான் நான் சொல்லியிருக்கிறேன். மொத்தம் முப்பத்தெட்டும் உங்களுக்குக்காகக் காத்திருக்கின்றன.
 
சதுர்புஜன் சிறுகதைகள்
ஜி.பி. சதுர்புஜன்
திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் , ரூ. 150 / -
 

0 comments:

Post a Comment