மைபாவின் கட்சியில் ....

இதோ இன்னொரு அறிமுகம். மை பா என்று சொன்னால் மிடியாகாரர்களுக்குத்
தெரியும்.சத்யமூர்த்தி பவனாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும்
மை பா வுக்குத் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். மணிக்கணக்கில்
பேசக்கூடிய வை கோ , மை பா பேசுவதை ரசித்துக் கேட்பார்.

2000 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்று பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடந்தது. அப்போது செல்வி ஜெயலலிதா `நாராயணன்` என்று அழைத்தார்.
மொத்த மீடியாவின் கவனமும் மை பா நாராயணன் பக்கம் திரும்பியது.

செல்வி ஜெயலலிதா பருகூரில் போட்டியிட்ட 1996 சட்டமன்றத் தேர்தலிலும் மை பா
முத்திரை உண்டு. மை பா அப்போது தமிழன் எக்ஸ்ப்ரஸில் ரிப்போர்டராக
இருந்தார்.அலுவலகத்து உள் அரசியலில் இவரை ஓரம் கட்டி வைத்திருந்தார்கள்.
சில விதிகளைத் தளர்த்தி பருகூர் போவதற்கு மை பா வுக்கு உத்தரவு
வாங்கிக் கொடுத்தேன். புலனாய்வு இதழ்கள் எல்லாம் `அ தி மு க தோற்று விடும்,
ஆனால் ஜெயலலிதா ஜெயித்து விடுவார் எழுதின. மை பா மட்டும் `ஜெயலலிதா
ஜெயிக்க மாட்டார்` என்று எழுதினார்.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன.நேரடி ஒளிபரப்புக்காக
ராஜ் டி வி யோடு இணைந்து செயல்பட்டு மூன்று நாள் தூக்கம்
போச்சு. எஸ் டி டி பில் எகிறிப் போச்சு. சுதாங்கனும், ரபி பெர்நார்டும்
பிலிப்பின்ஸ் நாட்டு மணிலாவில் .சென்னையில் கண்ட்ரோல்
அறையில் நான். `முதலமைச்சர் இறங்குமுகம் ` என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே பருகூர் தொகுதி
தி மு க வேட்பாளர் சுகவனத்தொடு மை பா வந்து விட்டார்.
போட்டி போட்ட சன் டிவி க்கு முழி பிதுங்கி விட்டது...

மை பா இப்போது n d tv hindu வில் இருக்கிறார். இதெல்லாம்
உங்களுக்காக சொன்னேன். நம்முடைய ரசனையே வேறு.
ஒரு முறை அவருடைய பல்லாவரத்து வீட்டுக்குப் போனேன்.
`சார் முக்கியமான வேலை இருக்கிறது ` என்று சொல்லி
உட்காரவைத்து விட்டுப் போனார். ஜன்னல் வழியாகத்
தெரிந்த காட்சி: புழக்கடையில் மனைவிக்கு ஒத்தாசையாக
தளிகைக்கு கிணற்றிலிருந்து தீர்த்தம் சேர்த்துக் கொண்டிருந்தார்.
அன்றைக்கே நான் அவர் கட்சியில் சேர்ந்து விட்டேன்.

இன்னொரு விஷயம். எப்போது போன் செய்தாலும், எந்த
அவசரத்திலும் `ஊரிலேன் காணி இல்லேன்....` என்று பாசுரம்
சொல்லாமல் விட மாட்டார். சத்சங்கத்வே நித் சங்கத்வம்.

0 comments:

Post a Comment