சிட்டி

 நடந்தாய் வாழி சிட்டி 

Chennaionline / subbu

(சுப்புவின் வயது அறுபது. அதில் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவின் கடற்கரைகளில் காலாற நடந்திருக்கிறார். கவிதைகள், கட்டுரைகள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பலவிதமாகப் பயணித்துள்ளவர் சுப்பு. மூத்த பத்திரிகையாளரான இவர் எழுதிய 'அருணகிரிநாதர்' என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தைக் காரசாரமாக விமர்சனம் செய்யும் ‘போகப் போகத் தெரியும்' என்ற இவருடைய தொடர், http://www.tamilhindu.com/author/subu/ என்ற இணைய இதழில் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.)
============================================
கே: 94 வருடங்களாக வாழ்ந்திருக்கின்றீர்கள். அதில் 80 வருடங்களாகத் தமிழ் மொழியோடு இலக்கியப் பூர்வமாகத் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை திருப்தியாக உள்ளதா? தமிழின் இன்றைய இலக்கியச் சூழல் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?

ப: ஐம்பது வருடங்களுகு முன்னால் தமிழின் வளர்ச்சி கதை, கவிதை, கட்டுரை என்று சிறப்பாக இருந்தது. அப்போது மணிக்கொடி மூலம் புதிய வடிவில் படைப்புகள் வெளிவந்தன. பாரதியின் தாக்கம் இருந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் சரிவுதான். மீண்டும் 1975 / 80இல் புதிய திருப்பம் ஏற்பட்டது. புதிய எழுத்தாளர்கள் நிறைய அளவில் தோன்றிய காலம் அது. இப்போதைய எழுத்தைப் பார்க்கும்போது இலக்கியம் குறித்த நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தியாகத்தான் இருக்கிறேன். இளம் பிராயத்தில் ஆங்கில எழுத்தாளர்களைப் படிக்கும்போது அது போலத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வரும். சர்க்கசில் வீரர்களுக்கு இடையே பபூன் வருவது போலவே என்னுடைய முயற்சி. நான் என்னை எப்போதுமே சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை.
சிட்டி  என்று அறியப்பட்ட பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது (22.8.2004).

இடுப்பெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து அவர் வெளிவந்த நேரம் அது. இலக்கிய ஜீவியான சிட்டிக்கு இரவு நேரங்களில் அறிவாற்றல் அதிகமாக வெளிப்படும். அந்த நேரத்தில் அவரோடு இருப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. சுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காராபூந்தி, நாடா பகோடா என்று நிரப்பப்பட்ட தட்டு எதிரில் இருக்க, மதுரை மணியின் ஸ்வரக் கோர்வை மறைவாக ஒலிக்க, பயாஸ்கோப்பில்  தொடங்கி, பத்திரிகையாளர் சாகசம் வரை பேசும் சிட்டியின் முடிவுரை என்னவோ பரமாச்சாரியார் சந்திப்பில்தான்.

சிட்டியுடைய நினைவாற்றல் மிரட்டக் கூடியது. சைமன் கமிஷனைப் பற்றிச் சொல்லும்போது, தடியடி விழாமல் நாம் தள்ளியிருக்க வேண்டும். காமராஜரைப் பற்றிப் பேசும்போது நமக்கே கொஞ்சம் சாமீபம் வந்துவிடும்.

பத்திரிகையாளர் என்ற முறையில் அடிக்குறிப்புகளும் ஆதாரங்களும் அவருக்கு மிகவும் அவசியம். “இதைப் பற்றிய குறிப்பு 1970இல் தினமணி கதிரில் வந்திருக்கிறது” என்று சொல்லி நிறுத்துவார். அங்கேதான் ஆபத்து ஆரம்பம்.

ஊளையிடும் நாய்கூட ஓய்வெடுக்கும், அந்த வேளையில், தினமணிக் கதிரைத்  தேடவேண்டும். பெரும்பாலும் விசு அண்ணாதான் மாட்டுவார்; சில சமயங்களில் நான். சிட்டியுடைய ஜீவன் எங்கே இருக்கிறது என்பது சிலருக்குத்தான் தெரியும். அது அட்டைப்  பெட்டியில் இருந்தது. அட்டைப் பெட்டி எங்கே இருந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சென்னை பெசன்ட் நகரின் ஒதுக்குப்புறத்தில் வண்ணாந்துறை என்ற சந்து; சிட்டியின் வீடு அதன் கிளைச் சந்தில் இருந்தது. மாடியில் இருந்த சிறிய வீட்டில் சிட்டியின் அறை; படுக்கை போக மீதி இடத்தில் டேபிள் ஃபேன் சிற்றுண்டிக்காக ஒரு முக்காலி, விருந்தினருக்காக ஒரு நாற்காலி, தவிர படுக்கைக்குக் கீழே, ஜன்னலை மறைத்துக்கொண்டு, என்று நீக்கமற நிறைந்திருக்கும் அட்டைப் பெட்டிகள்.

அட்டைப் பெட்டிகளில் பாலிதீன் பைகள், பாலிதின் பைகளில் பத்திரிகைச் செய்திகளும் கட்டுரைகளும்.

கண்ணிகளை அகற்றும் போர் வீரனைப் போல அட்டைப் பெட்டிகளைக் கையாண்டு, பாலிதீன் கவர்களை எடுத்து, அலசி, அடுக்கு மாறாமல் ஆராய்ந்து, தும்மலை வரவழைத்துக்கொண்டு, முதுகுப் பிடிப்பை அலட்சியம் செய்து, கொஞ்சம் பாத்ரூம் போய் விட்டு வந்து மிகவும் பிரயாசைப்பட்டாலும் பரவாயில்லை. அந்தத் தினமணிக் கதிர் கிடைக்கும் போது அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதற்காக இன்னோர் இரவில் கண்விழித்து அட்டைப் பெட்டிகளோடு மல்லுக் கட்டலாம்.

தன்னைக் ‘கோமாளி’ என்று அவர் குறிப்பிடுவது  தன்னடக்கத்தின் காரணமாக! மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார். அந்தப் பயணத்தில் அவரோடு சில நாள்களில் (அதாவது இரவுகளில்) நடந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது.

===============================
* புதுகைத் தென்றல் / ஜூலை - 2009
 நடந்தாய் வாழி சிட்டி

0 comments:

Post a Comment